வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர்-சின்னம் பொருத்தும் பணி
வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர்-சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
பெரம்பலூர்:
குரும்பலூர் -லெப்பைக்குடிகாடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 110 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குரும்பலூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய ‘பேலட் சீட்’ பொருத்தும் பணி அந்தந்த வார்டு வேட்பாளர்களின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதில் குரும்பலூர் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 15 வாக்குப்பதிவு எந்திரங்களிலும், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 17 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னமும் பொருத்தப்பட்டு தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தேர்தல் அதிகாரி ஆய்வு
இதனை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா, வட்டார தேர்தல் பார்வையாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி பூலாம்பாடி, அரும்பாவூர் ஆகிய பேரூராட்சிகளில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நாளையும் (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.