புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் தேர்பவனி
மதுரை கோ.புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் நேற்று தேர்பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
மதுரை,
மதுரை கோ.புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் நேற்று தேர்பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
லூர்து அன்னை ஆலயம்
மதுரை கோ.புதூர் பகுதியில் புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. பங்குத்தந்தை தாஸ் கென்னடி முன்னிலையில், திருச்சி சலேசிய மாநில உதவித் தலைவர் அருள்மாறன் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து "குடும்பம் நம்பிக்கையின் அடித்தளம்" என்ற தலைப்பில் ஜெபமாலை நிகழ்ச்சி, ஆடம்பர திருப்பலி நடந்தது.
இதுபோல், தினமும் காலையிலும் மாலையிலும் நவநாள் சிறப்பு திருப்பலியும் நடந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக 11-ந்தேதி நற்கருணை பவனி நடந்தது.
இந்தநிலையில், நேற்று காலையில் சலேசிய மாநில தலைவர் அகிலன் தலைமையில், புது நன்மை திருப்பலி நடந்தது. இரவு 8 மணியளவில், மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்துகொண்டு அன்னையின் தேர் பவனியை தொடங்கி வைத்தார். முன்னதாக, அன்னையின் தேரானது வண்ண பூக்களால், அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் விழா
இந்த தேர்பவனி, சந்தன மாதா கோவில் தெரு, மாதா கோவில் மெயின் ரோடு, பாரதியார் ரோடு, சிங்கார வேலர் ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில், மதுரையில் உள்ள அனைத்து பங்குகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாதாவிற்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவில் உதவி பங்குத்தந்தைகள் டேவிட், ஜெரால்டு, பிரபு, நோயல்ராஜ், புதூர் சின்னத்துரை, சலேசியர்கள், அருள்சகோதரிகள், பங்கு அருள்பணி பேரவை, பங்கு இறைமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.