துப்பாக்கியால் சுட்டதில் டிரைவர் படுகாயம் தப்பி சென்ற ஆசாமிக்கு வலைவீச்சு

தாராவியில் துப்பாக்கியால் சுட்டத்தில் டிரைவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2022-02-12 19:29 GMT
கோப்பு படம்
மும்பை,
தாராவியில் துப்பாக்கியால் சுட்டத்தில் டிரைவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி சென்ற ஆசாமியை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டார்
மும்பை தாராவி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அமீர்கான் (வயது38). டெம்போ டிரைவர். இவர் நேற்று காலை 8.45 மணி அளவில் அங்குள்ள கழிமுக கால்வாய் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் அவரை நோக்கி திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். மொத்தம் 5 ரவுண்டுகள் சுட்டதில் அமீர்கான் மீது குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அமீர்கானை உடனே மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த தாராவி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு சிதறி கிடந்த 2 தோட்டாக்களை மீட்டனர்.  ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் டிரைவர் அமீர்கானின் உடலில் இருந்து 3 தோட்டாக்களை அகற்றி உள்ளனர்.  இருப்பினும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வலைவீச்சு
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில ஆண்டுக்கு முன்பு நடந்த பிரச்சினையால் முன்விரோதம் கொண்ட நபர் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரியவந்தது. 
 தப்பி சென்ற நபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள  கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராவியில் டெம்போ டிரைவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்