அரசியல், மதம் சார்ந்த ஊர்வலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் இழப்பீடு-முன்கூட்டியே டெபாசிட் செய்வது தொடர்பாக விதிகளை வகுக்க அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை

ஊர்வலம், அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விதிகளை வகுக்கலாம் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை செய்து உள்ளது.

Update: 2022-02-12 19:14 GMT
மதுரை,

ஊர்வலம், அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விதிகளை வகுக்கலாம் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை செய்து உள்ளது.

அமைதி பேச்சுவார்த்தை

சிவகங்கையை சேர்ந்த ஆறுமுகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை அருகில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தின் தேரை, சொர்ண காளீஸ்வரர் கோவில் வழியாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
அப்போது, ஏற்கனவே அருளானந்தர் ஆலயத்தின் தேர் பவனியை கோவில் வழியாக கொண்டு சென்றபோது, தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் தேர் சேதமடைந்ததால், இரு தரப்பினரிடையே பிரச்சினை எழுந்ததாக தெரிய வருகிறது. அதை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஆலயத்தின் தேர் சொர்ணகாளீஸ்வரர் கோவில் வழியாக கொண்டு செல்லக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஆலயத்தின் தேரானது சொர்ண காளீஸ்வரர் கோவில் வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இழப்பீடு

இனிவரும் காலங்களிலும் அமைதிப் பேச்சுவார்த்தையில் விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் தேரை கோவில் வழியாக கொண்டு செல்வதற்கு போலீசார் அனுமதிக்கக்கூடாது. இனிவரும் காலங்களில் அனுமதி கோரினால் ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக இழப்பீட்டுத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து அரசியல் அல்லது மதம் அல்லது கூட்டமைப்பு சார்ந்த ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, இது போன்ற சம்பவங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்காக முன்கூட்டியே டெபாசிட் செய்வதும் அவசியம் என்பது தொடர்பாக விதிகளை ஏற்படுத்தலாம் என தமிழக அரசு, போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு பரிந்துரைப்பதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்