தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-02-12 19:03 GMT
சேதமடைந்த நிழற்குடை
சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட கிறிஸ்துநகர் பஸ் நிறுத்தத்தில்  பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையை அந்த பகுதியை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த நிழற்குடையின் பக்கவாட்டு சுவர், தூண்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அச்சமடைந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையோரம் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                        -த.விஜேஷ், விசுவாசபுரம்
மின்கம்பம் மாற்றப்பட்டது
தென்தாமரைகுளத்தில் இருந்து கோட்டையடி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்பட்டதால் அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடனேயே கடந்து சென்றனர். இதுபற்றி ‘தினந்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நட்டனர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சுரங்க பாலம் தேவை
வடசேரி அண்ணாசிலை சந்திப்பு அருகில் ஒரு பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளின் பஸ்கள் அங்கு வந்து காலையில் மாணவ-மாணவிகள் ஏற்றிக்கொண்டு செல்வதும், மாலையில் இறக்கி விடுவதும் வழக்கம். அவர்களை பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு சாலையை கடக்கும் போது வேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் சுரங்க பாதையோ அல்லது நடை பாலமோ அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -கே.மணிகண்டன், கொல்லவிளை தெரு, வடசேரி.
சாலை சீரமைக்கப்படுமா
ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட குப்பியந்தரை-நீர்வக்குழி, தெற்கு பிடாகை செல்லும் சாலை உள்ளது.  இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து தார்சாலை என்பதற்கான அடையாளமே தெரியாத வகையில் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                         -சுரேஷ், தெற்கு பிடாகை, பாலப்பள்ளம்.
பயணிகள் அவதி
மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நேற்று மாலை கருங்கலுக்கு புறப்பட்ட ஒரு அரசு பஸ்சின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது. திடீரென பெய்த மழையால் உள்ளே ஒழுக தொடங்கியதால், பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். எனவே, சேதமடைந்த பஸ்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                      -ஜெகன், தெருவுக்கடை.
நடவடிக்கை தேவை
நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் இருந்து கவிமணி பள்ளி வரை உள்ள சாலையின் ஓரம் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை உள்ளது. ஆனால், அவற்றை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் பாதசாரிகள் சாலையில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
                                              -ராசிக், கோட்டார்.
                  

மேலும் செய்திகள்