பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் வேலூர் சரக டி.ஐ.ஜி. பேச்சு
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த சிறப்பு பயிற்சி கூட்டத்தில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.
வேலூர்
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த சிறப்பு பயிற்சி கூட்டத்தில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.
பாதுகாப்பான சமுதாயம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து சிறப்பு பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கி பேசுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது போலீஸ் அதிகாரிகளின் கடமையாகும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இது ஒவ்வொரு போலீஸ் அதிகாரியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
சிறப்பு பயிற்சி
சிறப்பு அழைப்பாளர்களாக தனியார் அமைப்பை சேர்ந்த தேவசித்தம், சினேகா, பர்னபாஸ் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு செய்ய வேண்டியவை குறித்து விளக்கி கூறினர்.
மேலும் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை கண்டறிதல், அதிகம் நடைபெறும் குற்றங்களை கண்காணித்தல், அதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் சேகரித்து அதன் தாக்கத்தை ஆய்வு செய்தல் போன்றவை குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.