தவறான சிகிச்சையால் வாலிபரின் கால் செயலிழந்தது

தனியார் மருத்துவமனையில் நடந்த தவறான சிகிச்சையால் வாலிபரின் கால் செயலிழந்தது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் மனு அளித்தனர்.

Update: 2022-02-12 18:49 GMT
திருப்பூர், பிப்.13-
தனியார் மருத்துவமனையில் நடந்த தவறான சிகிச்சையால் வாலிபரின் கால் செயலிழந்தது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
பஸ் மோதியது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வீரணம்பாளையத்தை சேர்ந்த அழகுமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 
அழகுமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
படியூர் பஸ்நிறுத்தம் அருகே கடந்த மாதம் 24-ந் தேதி இரவு எனது மகன் அஜித்குமார் (வயது 23) மீது அரசு பஸ் மோதியது. விபத்தில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
பின்னர் எங்களது சொந்த விருப்பத்தின் பேரில் காங்கேயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வலது காலில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறி மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மாவுக்கட்டு போடப்பட்டது. அதன் பின்னர் வீட்டுக்கு செல்லுமாறு கூறினார்கள். 
தவறான சிகிச்சை
பின்னர் 5 நாட்கள் கழித்து தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது மாவுக்கட்டை பிரித்து பார்த்தனர். அப்போது அஜித்குமாரின் கால் அழுகிய நிலையில்  இருந்தது. தவறான சிகிச்சை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கேயம் போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் போலீசார் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள கூறினார்கள். அதன் பிறகு ஈரோடு, தஞ்சாவூர், கோவை என பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் அஜித்குமார் கால் செயலிழந்து விட்டதால் வலது காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தவறான சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இழப்பீடு பெற்றுத் தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார். 

மேலும் செய்திகள்