குமரி மாவட்டத்தில் பரவலாக மழை

கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-02-12 18:22 GMT
நாகர்கோவில்:
கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்யவில்லை. அதே சமயத்தில் கோடை வெயில் சுட்டெரித்தது. இந்த வெயிலின் தாக்கம் இரவிலும் நீடித்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவில் மழை பெய்தது.
அதே சமயத்தில் திருவட்டார், குமரன்குடி, மாத்தூர், கல்லடிமாமூடு, புத்தன்கடை, வேர்க்கிளம்பி, பூவன்கோடு, மாத்தார், ஏற்றக்கோடு, ஆற்றூர், திருவரம்பு, கொல்வேல், கொக்கோட்டு மூலை, திற்பரப்பு, குலசேகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை 1 மணி நேரம் கனமழை பெய்தது. பின்னர் மாலையிலும், இரவிலும் அவ்வப்போது பெய்த மழை தொடர்ந்து நீடித்தது.
பொதுமக்கள் மகிழ்ச்சி 
இதனால் பூமி குளிர்ந்து இதமான தென்றல் காற்று வீசியது. இந்த திடீர் மழையினால் ஏற்பட்ட குளிர்ந்த சீதோஷ்ணத்தை பொதுமக்கள் உற்சாகத்தோடு அனுபவித்தனர்.
இதேபோல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மலையோரப் பகுதிகளான திற்பரப்பு, களியல், பேச்சிப்பாறை, குலசேகரம், சுருளகோடு உள்ளிட்ட இடங்களிலும் நேற்று பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதில் சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழையாகவும் இருந்தது. மேலும் மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் 1½ மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்