அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்

அமராவதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-02-12 17:42 GMT
தளி
அமராவதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
 நெல் சாகுபடி 
அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாகும். அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர்இருப்பை பொறுத்து குறிப்பிட்ட இடைவெளியில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே இரண்டு போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளலாம். 
அதுமட்டுமின்றி அமராவதி ஆறு மூலமாக கிணறு, ஆழ்குழாய் கிணறு மூலமாக ஏற்படுகின்ற நிலத்தடி நீரை ஆதாரமாகக்கொண்டு தென்னை, வாழை, காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கூடுதல் விளைச்சல்
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்து உதவியதால் அணையின் நீர்இருப்பு 70 அடிக்கும் மேலாக இருந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு கல்லாபுரம்-ராமகுளம் வாய்க்கால் பாசனத்தில் இரண்டு போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து தற்போது அறுவடை நிலைைய எட்டி உள்ளது.
அதைத்தொடர்ந்து எந்திரத்தின் உதவியுடன் அறுவடை பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டில் பருவநிலையும் ஒத்துழைத்து மழைப்பொழிவும் சீராக பெய்ததால் கூடுதல் விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
மேலும் கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால் வைக்கோலை வாங்குவதற்கு கால்நடை வளர்ப்போர் ஆர்வமாக உள்ளனர். இதற்காக வைக்கோல் கட்டு கட்டும் எந்திரங்களும் அமராவதி பகுதியில் முகாமிட்டு உள்ளன. அத்துடன் அணையிலும் நீர்இருப்பு உள்ளதால் 2-ம் போக சாகுபடி மேற்கொள்ள முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் மழை பெய்வதற்கான சூழல் நிலவியது. திடீரென ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் நெல் அறுவடைக்கு தயாராகி வருகின்ற விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. 

மேலும் செய்திகள்