கிறிஸ்தவ ஆலயத்தில் நகை திருட்டு
தட்டார்மடம் கிறிஸ்தவ ஆலயத்தில் மர்மநபர் புகுந்து மாதா கழுத்தில் கிடந்த நகையை திருடிச் சென்றார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதா சொரூபம் உள்ளது. தினசரி இங்கு திரளான பக்தர்கள் வந்து நேர்த்திக் கடனுக்காக ஜெபம் செய்து செல்கின்றனர். மேலும் இந்த ஆலயத்தில் திருமணமும் நடக்கிறது. நேற்று முன்தினம் இந்த ஆலயத்தில் திருமணம் நடந்தது. மதியம் ஒரு மணிக்கு விருந்துக்கு பின்னர் திருமண வீட்டார் சென்று விட்டனர். ஆனால் ஆலயக் கதவுகள் மூடப்படாமல் இருந்ததாக தெரிகிறது.
இதைப் பயன்படுத்தி மர்ம நபர்கள், ஆலயத்துக்குள் நுழைந்து மாதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மற்றும் ஒரு ஜோடி கல் கம்மல் உள்ளிட்ட 3 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிக் கொண்டு சென்று விட்டனர். இதனை அறிந்த பங்குத்தந்தை ஸ்டாலின் இதுபற்றி தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.