மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவிக்கு நிதி உதவி
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் படித்த கவுசல்யா என்ற மாணவி இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. இவரது தந்தை உச்சிமாகாளி சைக்கிளில் சென்று முறுக்கு, பிஸ்கட் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் நீட் தேர்வில் அவரது மகள் கவுசல்யா வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க கலந்தாய்வில் இடம் கிடைத்ததை பாராட்டும் விதமாக சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் பாராட்டு விழா நடந்தது. வாலாஜா நவாப் அறக்கட்டளை தலைவர் அன்வர் பாட்சா தலைமை தாங்கினார். பள்ளிவாசல் தலைமை இமாம் முகம்மது ஆபிதின் முன்னிலை வகித்தார். இதையொட்டி சிங்கப்பூர் ஹூசேன் பவுண்டேசன் மற்றும் வாலாஜா நவாப் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகை மற்றும் நினைவு பரிசை சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் வழங்கி மாணவியை பாராட்டினார்.