சேலைகளை எடுத்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் தம்பி மகன் காரை சிறைபிடித்த தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகள் விசாரணை
சேலைகளை எடுத்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் தம்பி மகன் காரை தி.மு.க.வினர் சிறைபிடித்தனர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தேனி:
பெரியகுளம் நகராட்சி 24-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இந்நிலையில் பெரியகுளம் தென்கரை பெருமாள் கோவில் முன்பு வந்த ஒரு காரை தி.மு.க.வினர் சிலர் நேற்று முன்தினம் இரவு சிறைபிடித்தனர்.
அந்த காரில் அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க வேட்டி, சேலை மற்றும் பணம் கொண்டு செல்லப்படுவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். மேலும் தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலைகள் பறிமுதல்
விசாரணையில் அந்த கார், ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு தம்பி ஓ.ராஜாவின் மகன் முத்துக்குகன் என்பவருடையது என தெரியவந்தது. இதனையடுத்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதன் அங்கு வந்தார்.
அப்போது சிறை பிடித்த காரில் சோதனை நடத்த வேண்டும் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தினர். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
இதற்கிடையே அந்த காரில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசார் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் டிரைவர் அங்கிருந்து காரை எடுத்து செல்ல முயன்றார். ஆனால் தடுத்து நிறுத்தி, அந்த கார் தென்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காரில் சோதனை செய்தபோது அதில் சுமார் 20 சேலைகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பள்ளியில் சோதனை
இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, கார் உரிமையாளரான முத்துக்குகன் தனது பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க சேலைகள் வாங்கி வந்ததாக தெரிவித்தார். மேலும் மீதமுள்ள சேலைகள் பள்ளியில் உள்ளதாகவும், அதற்கான ரசீது இருப்பதாகவும் கூறிய அவர், அதற்கான ரசீதை போலீஸ் துணை சூப்பிரண்டுவிடம் காட்டினார்.
இதையடுத்து அவர் நடத்தி வரும் பள்ளியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கும் சில சேலைகள் இருந்தன. அவை ரசீதில் குறிப்பிட்டபடி சரியாக இருந்தன.
இந்தநிலையில் தி.மு.க. வினர் காரை சேதப்படுத்தி விட்டதாக முத்துக்குகன் தரப்பில் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதேபோல் 24-வது வார்டில் அ.தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபடுவதாக தி.மு.க.வினர் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த இரு புகார்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் பறிமுதல் செய்த சேலைகள் உரிய விசாரணைக்கு பின் ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.