விருத்தாசலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
விருத்தாசலம் அருகே கோவில உண்டியலை உடைத்து மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் கிராமத்தில் மணிமுக்தாற்றின் கரையோரம் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் கோவில். இந்த கோவிலை அதே பகுதியை சேர்ந்த பூசாரி மணி என்பவர் கவனித்து வருகிறார்.
நேற்று முன்தினம் கோவில் பூஜைகளை முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்த போது, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதில் சுமார் 3 ஆயிரம் ரூபாய் இருந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசல்ம போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
வலைவீச்சு
இதே கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.