வயலில் தேங்கிய தண்ணீரில் அறுவடை செய்யும் விவசாயிகள்

நெல்பயிர்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் வெளியேற வழியில்லாததால் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று விவசாயிகள் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-02-12 17:13 GMT
காரைக்குடி, 
நெல்பயிர்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் வெளியேற வழியில்லாததால் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று விவசாயிகள் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
வயலில் தேங்கிய தண்ணீர்
காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் கடந்த ஆண்டு முதல் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள கண்மாய்கள் நிரம்பியது. இதை பயன்படுத்திய விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து வயல்களில் நெல் நடவு செய்து களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட விவசாய பணிகளை செய்து வந்து தங்களது பயிர்களை காப்பாற்றி வந்தனர். 
இந்தநிலையில் காரைக்குடியை அடுத்த மணச்சை, பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதியில் தாழ்வான வயல்களிலும் விவசாயிகள் நெல் பயிர்கள் பயிரிட்டு அதை பராமரித்து வந்தனர். மேலும் இந்த தாழ்வான வயல்களை சுற்றி கண்மாய்கள் உள்ளதால் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் அனைத்தும் இந்த வயல்களில் தேங்கி உள்ளது. 
அறுவடை
இதனால் நெல்பயிர் விளைந்த வயல்களில் இருந்து தண்ணீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான நெல்லை எவ்வாறு அறுவடை செய்வது என்று விவசாயிகள் தவித்து வந்தனர். இதையடுத்து ஒரு சில விவசாயிகள் தண்ணீர் தேங்கிய வயல்களில் அறுவடை எந்திரம் உள்ளே இறங்க முடியாததால் கூலியாட்களை கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். 
இதுகுறித்து காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் நெல் அறுவடை செய்த விவசாயி அழகப்பன் கூறியதாவது:- இந்த பகுதியில் சுமார் முக்கால் ஏக்கர் நிலத்தில் ஆண்டுதோறும் நெல் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு இந்த பகுதியில் கடும் மழை பெய்ததால் தற்போது வரை இதை சுற்றியுள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
பாதிப்பு 
இதனால் தாழ்வான நிலையில் உள்ள  வயல்களில் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் வரும் வகையில் உள்ளது. இவ்வாறு வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வழியில்லாமல் இருந்து வந்த நிலையில் பயிரிட்ட நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து இந்த பயிர்களை அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்ய இயலாத நிலை இருப்பதால் கூலி யாட்களை கொண்டு அறுவடை செய்து வருகிறேன். 
இந்த அறுவடை பணிக்காக வரும் பெண்களுக்கு ரூ.350, ஆண்களுக்கு ரூ.500 சம்பளமாக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வயல்களில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று அவர்கள் அறுவடை செய்த பயிர்களை 2 நாட்கள் வரை வெயிலில் உலர வைத்து அதன் பின்னர் களத்தில் அடித்து நெல்லை சேகரிக்க முடியும். 
முக்கால் ஏக்கர் நிலத்தில் பயிர் பயிரிட்டு அறுவடை செய்ய இதுவரை ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். அறு வடை செய்து கணக்கு பார்த்தால் ரூ.30ஆயிரம் மட்டுமே கிடைக்கும். இந்த விவசாயத்தில் ரூ.20 ஆயிரம் வரை நஷ்டத்தை சந்திக்க வேண்டியது உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்