கடலூர் முதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி பெண் சாவு ‘லிப்ட்’ கேட்டு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

கடலூர் முதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி பெண் உயிரிழந்தார்.

Update: 2022-02-12 17:12 GMT

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் எஸ்.என்.நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன், 13 வயதில் ஒரு மகள் உள்ளனர். ரவி உடல்நலம் சரியில்லாமல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 

இந்நிலையில் நேற்று மணிமேகலை சுப்பிரமணிய புரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்லவதற்காக எஸ்.என். நகரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். 

அப்போது அந்த வழியாக கடலூர் முதுநகர் அருகே உள்ள நாகம்மாள் பேட்டையை சேர்ந்த மாயவேல் (வயது 46) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். மாயவேல் உறவினர் வழியில் மணிமேகலைக்கு தெரிந்த நபர் ஆவார்.

 இதன் மூலம் அவரிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டு, லிப்ட் கேட்டார். உடன் மாயவேலும், தன்னுடன் மோட்டார் சைக்கிளில் மணிமேகலையை அழைத்துக்கொண்டு கடலூர்-விருத்தாசலம் சாலையில் தொண்டமாநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது,  தொண்டமாநத்தம் சென்ற போது, எதிரே, திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் மணிமேகலை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மாயவேல் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிமேகலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆ ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்