தி.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
நிலக்கோட்டை அருகே தி.மு.க. பிரமுகரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள மிளகாய்பட்டியை சேர்ந்தவர் துரைபாண்டி (வயது 35). தி.மு.க. இளைஞரணி ஒன்றிய பொறுப்பாளர். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த உறவினரான சின்னபாண்டி (30) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துரைப்பாண்டியின் வீட்டுக்கு சென்ற சின்னபாண்டி அவரிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சின்னபாண்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் துரைப்பாண்டியின் முகத்தில் குத்தினார்.
இதில் காயமடைந்த அவர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் வழக்குப்பதிவு செய்து சின்னபாண்டியை கைது செய்தனர்.