மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி உள்பட 2 பேர் பலி

நத்தம் அருகே மொபட்-மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2022-02-12 17:00 GMT
செந்துறை:
நத்தம் அருகே மொபட்-மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிய விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.
மொபட் மீது மோதல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 57). இவர், அப்பகுதியில் மளிகை மற்றும் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த 10-ந் தேதி இரவு இவர், டீக்கடை தேவைக்காக பால் வாங்குவதற்காக கோசுகுறிச்சி செல்ல முடிவு செய்தார். அதன்படி, பழனிசாமி தனது உறவினரான அதே ஊரை சேர்ந்த மணிகண்டனை உடன் அழைத்து கொண்டு மொபட்டில் கம்பிளியம்பட்டி வழியாக கோசுகுறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கம்பிளியம்பட்டியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிரே முத்தம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணபதி (28) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது.
2 பேர் பலி
இந்த விபத்தில் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மணிகண்டன், கணபதி ஆகியோர் உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணபதி நேற்று உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன பழனிசாமிக்கு வீரம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணபதிக்கு திருமணமாகி கார்த்திகா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்