அரசு ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை பணம் கொள்ளை
விழுப்புரத்தில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு மின்வாரிய குடியிருப்பு ரேவதி நகரில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 52). இவர் விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஓவர்சீயராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டார். அவரது மனைவி சத்யா மட்டும் வீட்டில் இருந்தார். நடராஜன் வேலைக்கு சென்ற சிறிது நேரம் கழித்து அவரது மனைவி சத்யா, வீட்டை பூட்டிவிட்டு ஏழுசெம்பொன் கிராமத்தில் உள்ள தங்கள் விவசாய நிலத்திற்கு சென்றார்.
நகை-பணம் கொள்ளை
இந்நிலையில் இரவு 7 மணியளவில் நடராஜனும், அவரது மனைவி சத்யாவும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த மரபீரோ, இரும்பு பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 13 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். கணவன்- மனைவி இருவரும் வெளியே சென்றிருப்பதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பட்டப்பகலிலேயே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை, வெள்ளி கொலுசுகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சமாகும்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.