தாய், மனைவியிடம் தகராறு செய்த தம்பதியை மிரட்டுவதற்கு துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கைது போடியில் நள்ளிரவில் பரபரப்பு

போடியில் தாய், மனைவியிடம் தகராறு செய்த தம்பதியை மிரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-12 16:38 GMT
போடி:
தேனி மாவட்டம் போடி வ.உ.சி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். அவருடைய மகன் முருகன் (வயது 36). இவர், இந்திய ராணுவத்தின் மேற்கு வங்காள படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வருகிறார்.  தற்போது இவர், 1½ மாத விடுப்பில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
போடி சர்ச் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (55). சாலைப்பணியாளராக உள்ளார். அவருடைய மகன் தீனதயாளன் (26). இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முருகனின் மனைவி சரவணபிரியாவை (26) கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சரவணபிரியா, தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராணுவத்தில் இருந்தவாறே அப்போதைய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வியிடம் முருகன் புகார் செய்தார். 
அரிவாளை காட்டி மிரட்டல்
அதன்பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்தனர். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகனின் தாய் முத்துலட்சுமி, மனைவி சரவணபிரியா ஆகியோர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். 
அப்போது மணிவண்ணன், அவருடைய மனைவி ஞான ஒளி (45) ஆகியோர் 2 பேரையும் வழி மறித்தனர். பின்னர் மணிவண்ணன், எனது மகன் சிறை சென்றதற்கு நீங்கள் தான் காரணம். இதனால் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் சும்மா விட மாட்டேன் என்று அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் 2 பேரையும் அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. 
 வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு
இதுகுறித்து முத்துலட்சுமி, முருகனுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர், தனது கையில் இருந்த கைத்துப்பாக்கியை (பிஸ்டல்) எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். மேலும் மணிவண்ணனை சுட்டு தொலைத்து விடுவேன் என மிரட்டினார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் மணிவண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து முருகனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 
கைது
பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே சரவணபிரியா போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதன்பேரில், பெண்களை வன்கொடுமை செய்தல் மற்றும் கொலைமிரட்டல் விடுத்ததாக மணிவண்ணன், ஞான ஒளி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான முருகன், விடுமுறை முடிந்து நேற்று மேற்கு வங்காள ராணுவ முகாமுக்கு செல்லஇருந்தது குறிப்பிடத்தக்கது‌. 

மேலும் செய்திகள்