தனியார் கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலி
தனியார் கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அருகே உள்ள சதானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மேரி நிர்மலி (வயது 40). இவர் வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ரத்தினமங்கலத்தில் இருந்து மொபட்டில் சதானந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நல்லம்பாக்கம் கூட்ரோடு அருகே பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மேரி நிர்மலி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.