உயிர் உரங்கள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி
நீடாமங்கலம் அருகே பயறு சாகுபடியில் மகசூல் அதிகரிக்க உதவும் உயிர் உரங்கள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் அருகே பயறு சாகுபடியில் மகசூல் அதிகரிக்க உதவும் உயிர் உரங்கள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.
செயல் விளக்க நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் பயறுவகைப்பயிர் சாகுபடியில் மகசூலை அதிகரிக்கும் உயிர் உரங்கள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி திருமீயச்சூர் கிராமத்தில் நடந்தது.
இதில் நீர்வள, நிலவள திட்ட விஞ்ஞானி செல்வமுருகன் பேசுகையில், ‘உயிர் உரங்கள் பயன்படுத்துவதன் மூலமாக மண்ணின் வளத்தை அதிகரித்து இடுபொருட்களின் செலவை குறைக்கலாம். உயிர் உரங்கள் மூலம் பயறு வகைப்பயிர்களில் அதிக மகசூல் பெற முடியும்.
விதை நேர்த்தி
உயிர் எதிரி கொல்லியான சூடோமோனாஸ் கொண்டு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற வீதத்தில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின் உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை கொண்டு தலா 200 கிராம் என்ற அளவில் ஒரு எக்டேருக்கு தேவையான விதையுடன் கலந்து நன்கு ஆறிய கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.
எதிர் உயிரி கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்வதனால் விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படும். ரைசோபியம் உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் வாயிலாக வளிமண்டல நைட்ரஜன் மண்ணில் நிலை நிறுத்தப்பட்டு பயிருக்கு தேவையான தழைச்சத்து உரம் சேமிக்கப்படுவதுடன் மகசூலும் 20 சதவீதம் அதிகரிக்கும்.
10 சதவீதம் அதிகரிக்கும்
பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தை பயிருக்கு எளிதில் கிட்டும் வகையில் மாற்றுவதுடன் ரைசோபியத்தின் தழைச்சத்து நிலைநிறுத்தும் திறனை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்’ என்றார். இதையடுத்து அவர் உயிர் உரத்தை பயன்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் விதை நேர்த்தி செய்யாத விவசாயிகள் உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து விதைத்த 7 நாட்களுக்குள் வயலில் தெளித்து விட வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் விதைகள் பெற்று நெல் தரிசு உளுந்து சாகுபடி செய்திருந்த மற்றும் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை நீர்வள, நிலவள திட்ட இளநிலை உதவியாளர் சுரேஷ் மற்றும் குகன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.