கலைநயமிக்க பொருட்கள் உருவாக்கி வணிக ரீதியாக பயன் பெறலாம்
மூங்கில்களை கொண்டு கலைநயமிக்க பொருட்கள் உருவாக்கி வணிக ரீதியாக பயன் பெறலாம் என்று இளைஞர்களுக்கு, சுற்றுச்சூழல் கல்வி மைய இயக்குனர் சுதாகர் அறிவுரை வழங்கினார்.
கூடலூர்
மூங்கில்களை கொண்டு கலைநயமிக்க பொருட்கள் உருவாக்கி வணிக ரீதியாக பயன் பெறலாம் என்று இளைஞர்களுக்கு, சுற்றுச்சூழல் கல்வி மைய இயக்குனர் சுதாகர் அறிவுரை வழங்கினார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி
மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சார்பில் கூடலூர் தோட்டத்தொழிலாளர் குழந்தைகள் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு மூங்கில்களை கொண்டு கலைநயம் மிக்க பொருட்கள் செய்வது குறித்த பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜார்ஜ் தலைமை தாங்கினார். தாயகம் திரும்பியோர் பேரவை நிர்வாகி வக்கீல் ரகு முன்னிலை வகித்தார். கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு வரவேற்றார்.
பின்தங்கிய கூடலூர்
முகாமில் சுற்றுச்சூழல் கல்வி மைய இயக்குனர் சுதாகர் கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதி மிகவும் பின்தங்கி உள்ளது.
இதனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கிராமப்புற மாணவர்களை கண்டறிந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மூங்கில்களை கொண்டு வீட்டு உபயோக மற்றும் கலைநயம் மிக்க பொருட்கள் உருவாக்குவது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது.
வணிக ரீதியாக பயன்
இந்த சான்றிதழை கொண்டு வங்கி மூலம் மத்திய அரசின் முத்ரா கடன் பெறலாம். மூங்கில்களைகொண்டு செய்யப்படும் கலைநயமிக்க பொருட்களை 5 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் வணிக ரீதியாக விற்பனை செய்யலாம். இயற்கை பொருட்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
மேலும் மக்களும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் முறையாக பயிற்சி பெற்று வணிக ரீதியாக பயன் அடையலாம். பயிற்சி பெற்ற மாணவர்கள் வழிகாட்டப்பட்ட பாதையில் சென்று பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் சுஜாதா, ரமணி உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.