காஞ்சீபுரத்தில் அலங்கார ஊர்தி ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், அலங்கார ஊர்திகளை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-02-12 12:09 GMT
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 3 அலங்கார ஊர்திகள் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் அனுப்பப்படும் என தெரிவித்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள வ.உ.சி அலங்கார ஊர்தி மற்றும் பெரியார் அலங்கார ஊர்திகளை சிறப்பான முறையில் வரவேற்று பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளான அலங்கார ஊர்திகளுக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளித்தல், பாதுகாப்பான முறையில் மாவட்டத்திற்கு கொண்டு வருதல், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல், பொதுமக்களின் பார்வைக்கு காட்சிபடுத்துதல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள் கண்டு களித்திட தேவையான முன்னேற்பாடுகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்