பயறு வகைகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்ததால் பயறு வகைகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2022-02-12 11:47 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்ததால் பயறு வகைகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நல்ல மழை
மன்னார்வளைகுடா கடல்பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழைபெய்தது. சாரல்மழையாகவும், நல்ல மழையாகவும் பெய்தது. திடீரென்று பெய்த இந்த மழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயறு வகைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
கடந்த ஆண்டு நெல் விளைச்சல் நன்றாக இருந்த நிலையில் நம்பிக்கையுடன் பயறுவகைகளை பயிரிட்டு இருந்ததாகவும் இந்த மழையால் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் பயறுவகைகள் நன்றாக வளரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு 2-ம் போக பயறுவகைகள் சாகுபடி விவசாயிகளுக்கு பயனளிப்பதாக மாறி உள்ளது. 
இலக்கு
இதுகுறித்து விவசாய துறையினரிடம் கேட்டபோது கூறியதாவது:- மாவட்டத்தில் நெல்அறுவடைக்கு பின்னர் பயறு வகைகளை பயிரிட ஊக்குவித்து வருகிறோம்.இதன்படி இந்த ஆண்டு 8 ஆயிரம் எக்ேடர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 4 ஆயிரத்து 500 எக்டரில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைபயறு உள்ளிட்டவைகளை பயிரிட்டு உள்ளனர். இந்த பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகிறது.
இநத்நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் இந்த பயறுவகைகளுக்கு நன்மை கிடைத்துள்ளது. நெல் அறுவ டைக்கு பின்னர் பயறுவகைகள் பயிரிடுவதால் மண் வளம் அதிகரிக்கிறது. மண்ணின் அங்கக சத்து அதிகரிக்கிறது. பயறுவகைகள் குறைந்த நாட்களில் அதிக லாபம் தரக் கூடியது. குறைந்த அளவு நீரே தேவைப்படுகிறது. பூச்சி தாக்குதல் குறைவு. 
தீவன பயிர்கள்
நெல்அறுவடைக்கு பின்னர் பயறுவகைகள் பயிரிட்டால் அடுத்த முறை நெல் சாகுபடியின்போது பூச்சி தாக்குதல் பெருமளவில் குறையும். தீவன பயிர்களை பயிரிடுவதால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதுடன் மண்வளம் பாதுகாப்பதோடு, மண் அரிப்பையும் தடுக்கிறது. எனவே, தற்போதுள்ள ஈரப்பத நிலையை பயன்படுத்தி விவசாயிகள் பயறுவகைகளை அதிகஅளவில் பயிரிட வேண்டும். இவ்வாறு கூறினர்.

மேலும் செய்திகள்