தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை - துணை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை-போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 59 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் தேர்தலில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து கட்சி வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். பொது இடங்களில் கட்சி சின்னங்கள், தலைவர்களின் புகைப்படங்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். தேர்தல் விதிமுறை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி பேசினார்.
ஆரணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 61 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமை தாங்கினார். இதில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றை குறித்ததான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் அனைத்து வேட்பாளர்களும், அனைத்து கட்சியினரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.