தொண்டையில் தேங்காய் சிக்கி 3 வயது குழந்தை சாவு
தொண்டையில் தேங்காய் சிக்கியதால் 3 வயது குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை,
பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனம், பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த். இவருடைய மகன் சஞ்சீஸ்வரன் (வயது 3). இவரது வீட்டில் சமைப்பதற்காக தேங்காய் துண்டுகளை நறுக்கி வைத்து இருந்தனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சஞ்சீஸ்வரன், அந்த தேங்காய் துண்டுகளை எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டது. அப்போது தேங்காய் துண்டுகள் குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கி விழுந்தது.
உடனடியாக குழந்தையை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். குழந்தையின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தொண்டையில் தேங்காய் சிக்கி குழந்தை பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.