வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-12 01:25 GMT
வேலூர்

வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தபால் வாக்கு

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. வேலூர் மாநகராட்சியில் 58 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரிக்கும் பணி நடைபெற்றது. இதனை வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வேலூர் மாநகராட்சியில் 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 422 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இது தவிர வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2 கட்ட பயிற்சிகள் நடைபெற்றுள்ளது.

6,000 வாக்கு சீட்டுகள்

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட உள்ளது. மாநகராட்சி பகுதியில் வேலை பார்க்கும் அலுவலர்கள் குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து வந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கப்படும்.

அவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி அந்த வாக்குசீட்டை உறையில் போட்டு அனுப்புவார்கள். சுமார் 6 ஆயிரம் தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் அலுவலர்கள், போலீசார் என 8 பேர் பணியில் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்