கொங்கணாபுரம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தரைமட்டம்-ரூ.3 லட்சம் ரொக்கம் எரிந்து சாம்பல்
கொங்கணாபுரம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிைச தரைமட்டமானது. இதில் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது.;
எடப்பாடி:
கொங்கணாபுரம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிைச தரைமட்டமானது. இதில் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது.
கியாஸ் சிலிண்டர் வெடித்தது
கொங்கணாபுரத்தை அடுத்த கன்னந்தேரி ஜோதிடர் காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 44). இவர் தனது தாயார் முத்தம்மாள் (75), மனைவி தமிழ்ச்செல்வி (37) மற்றும் மேகாஸ்ரீ என்ற 2 வயது குழந்தையுடன் குடிசையில் வசித்து வந்தார். நேற்று காலை ரவிச்சந்திரன் தனது மனைவி, குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது தாயார் முத்தம்மாள் வீட்டில் சமைத்து விட்டு சரியாக கியாஸ் அடுப்பை அணைக்காமல் வெளியே வந்து தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். இதனிடையே வீட்டின் உள்ளே இருந்து கரும்புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முத்தம்மாளிடம் தெரிவித்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் வீட்டின் உள்ளே எரிந்து கொண்டிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தரைமட்டமானது.
ரூ.3 லட்சம் ரொக்கம்
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புபடையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த ராகி, வேர்க்கடலை, ரூ.3 லட்சம் ரொக்கம், பீரோ, துணிகள் என அனைத்தும் தீயில் கருகி சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் அங்கு வந்த சேத விவரங்களை பார்வையிட்டனர்.
மேலும் தீ விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.