மத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது- ‘ஹிஜாப்' வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு கருத்து

இந்தியாவுக்கு தனி மத அடையாளம் கிடையாது என்றும், ஒவ்வொரு குடிமகனும் தனது விருப்பப்படி மத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க உரிமை உள்ளது என்றும் ‘ஹிஜாப்’ வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

Update: 2022-02-11 21:50 GMT
பெங்களூரு:

மத அடையாள ஆடைகள்

  கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அதற்கு அக்கல்லூரி முதல்வர் தடை விதித்து உத்தரவிட்டார். இதை கண்டித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். பதிலுக்கு இந்து மாணவர்கள் காவி துண்டு போட்டு வந்தனர். அதுேபால் சிவமொக்கா, தாவணகெரே மாவட்டம் ஹரிகரா, பாகல்கோட்டை உள்பட பகுதிகளில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து பள்ளி-கல்லூரிகளுக்கு நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள், கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தங்களை வகுப்புகளில் ஹிஜாப் அணிய அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரினர்.

எழுத்துப்பூர்வமான உத்தரவு

  அந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மத அடையாள ஆடைகளை வகுப்பறைக்கு அணிந்துவர தடை விதித்து உத்தரவிட்டனர்.

  இதுதொடர்பாக ஐகோர்ட்டின் எழுத்துப்பூர்வமான உத்தரவு நேற்று வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளி-கல்லூரிகள்

  கர்நாடக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் பள்ளி-கல்லூரிகளை மீண்டும் திறக்க வேண்டும். முடிந்தவரை சீக்கிரமாக மாணவ-மாணவிகளை வகுப்புக்கு வர அனுமதிக்க வேண்டும். இந்த மனுக்கள் விசாரணை நிலையில் இருப்பதால், அனைத்து மதங்களை சேர்ந்த மாணவர்களும் மத அடையாளங்கள் அதாவது ஹிஜாப், காவி துண்டு, காவி கொடி அல்லது அது தொடர்பான மத ஆடைகளை வகுப்புக்கு அணிந்து வர தடை விதிக்கிறோம். அடுத்த உத்ததரவு பிறப்பிக்கும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

  கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகள் மற்றும் அதனால் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதும் வேதனை அளிப்பதாக உள்ளது. அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம், தனிநபர் சட்டம் உள்ளிட்ட விஷயங்கள் தீவிரமான விவாதமாக மாறியுள்ளது. இந்தியா பல்வேறு கலாசாரங்கள், பண்பாடுகள் மற்றும் மொழிகளை கொண்ட நாடு என்பதை இந்த கோர்ட்டு குறிப்பிட விரும்புகிறது.

உரிமை உள்ளது

  மதசார்பற்ற நாடான இந்தியாவுக்கு ஒரு குறிப்பிட்ட தனி மத அடையாளம் கிடையாது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது விருப்பப்படி மத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க உரிமை உள்ளது. நமது நாட்டில் ஒரு முறையான வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இத்தகைய நாட்டில் மதம், கலாசாரம், பண்பாட்டின் பெயரில் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.

  முடிவில்லாத போராட்டங்கள், கல்வி நிலையங்கள் காலவரையின்றி மூடப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடய விஷயமல்ல. மாணவர்கள் தொடர்ந்து போராடுவதை விட வகுப்புகளுக்கு வருவது தான் சிறந்தது. இந்த கல்வி ஆண்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதனால் கல்வி நிறுவனங்கள் உள்பட சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்.
  இவ்வாறு அதில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உயர்நிலை பள்ளிகள்

  கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவை அடுத்து மாநில அரசு, 8 முதல் 10-ம் வகுப்பு வரையிலான உயர்நிலை பள்ளிகளை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் திறப்பதாக அறிவித்துள்ளது.

  அதன் பின்னர் 2-ம் கட்டமாக பி.யூ.சி. உள்பட கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்