நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
அச்சன்புதூர்:
நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல்
கடையநல்லூர் நகராட்சி மற்றும் அச்சன்புதூர், பண்பொழி, வடகரை, ஆய்க்குடி, சாம்பவர்வடகரை ஆகிய பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகின்றன.
தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் இறக்கி வைக்கப்பட்டு அந்த அறை தேர்தல் நடத்தும் அலுவலரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
பாதுகாப்பு
தொடர்ந்து, அந்த அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தலுக்கு முந்தைய நாளான வருகிற 18-ந் தேதியன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 99-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 99-ம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது, என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகிரி
இதேபோல் சிவகிரி, வாசுதேவநல்லூர், ராயகிரி நகர பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள தனியறையில் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.