நம்பியூரில் தொடரும் அட்டகாசம் 4 நாய்களை கடித்துக்கொன்ற சிறுத்தை; பொதுமக்கள் பீதி

நம்பியூரில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தை, அந்த பகுதியில் 4 நாய்களை கடித்துக்கொன்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.;

Update: 2022-02-11 21:11 GMT
நம்பியூர்
நம்பியூரில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தை, அந்த பகுதியில் 4 நாய்களை கடித்துக்கொன்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர். 
சிறுத்தை அட்டகாசம்
நம்பியூர் காந்திபுரம் பகுதியில் புகுந்த சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் உள்ள 3 ஆடுகளை கடித்து கொன்றது. பின்னர் மறுநாள் நம்பியூர் செட்டியம்பகுதியில் புகுந்த அந்த சிறுத்தை அங்கு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளை கடித்துக்கொன்றது. 
இதுபற்றி அறிந்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் பதிவான கால் தடங்களையும் ஆய்வு செய்தனர். அது சிறுத்தையின் கால் தடம்தான் என்பதையும் உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். எனவே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு நம்பியூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
கண்காணிப்பு கேமராக்கள்
இதைத்தொடர்ந்து நம்பியூர், இருகாலூர், வேமாண்டம்பாளையம், கூடக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையொட்டி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 26-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நவீன தெர்மல் கேமரா மூலம் தேடுதல் வேட்டையை வனத்துறையினர் தீவிரப்படுத்தினர். எனினும் சிறுத்தையை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 
இந்த நிலையில் நேற்று நம்பியூர் கூடக்கரை பகுதியில் சிறுத்தை மீண்டும் புகுந்த சம்பவம் நடந்து உள்ளது. நேற்று மதியம் 12 மணி அளவில் கூடக்கரை பகுதியை சேர்ந்த வேலுச்சாமியின் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை அங்கு வளர்க்கப்பட்ட 4 நாய்களை கடித்துக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. சிறிது நேரம் கழித்து வந்த வேலுச்சாமி பார்த்தபோது அவருடைய 4 வளர்ப்பு நாய்களும் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நாய்களை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம்தான்  என்பதை உறுதி செய்தனர். 
கூண்டு வைத்து பிடிக்க...
நம்பியூரில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தையானது நேற்று பட்டப்பகலில் புகுந்து 4 நாய்களை கடித்து குதறிய சம்பவம் அங்குள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தோட்டம் மற்றும் புதர் அதிக அளவில் உள்ளது. இதனால் ஆடு மற்றும் நாய்களை கடித்து கொன்றதும் சிறுத்தையானது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தப்பி சென்று தோட்டம் மற்றும் புதர் பகுதியில் பதுங்கி கொள்கிறது. இதனால் வனத்துறையினரின் தேடுதல் வேட்டையில் இதுவரை சிறுத்தை சிக்கவில்லை. எனவே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை வனத்துறையினர் விரைந்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

மேலும் செய்திகள்