மகளை கிண்டல் செய்ததால் தகராறு: வாலிபரை அடித்துக்கொன்றதாக தந்தை-அத்தை கைது; அந்தியூர் அருகே பரபரப்பு

அந்தியூர் அருகே மகளை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக்கொன்றதாக தந்தை-அத்தையை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-02-11 21:00 GMT
அந்தியூர்
அந்தியூர் அருகே மகளை  கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக்கொன்றதாக தந்தை-அத்தையை போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிண்டல்
அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள மூங்கில்பட்டி கீழ்வாணி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). விவசாயி. 
அதே பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரின் மகன் வெங்கடேஷ் (23). கூலித்தொழிலாளி. 
சரவணனின் மகள் மூங்கில்பட்டியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவர் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் வெங்கடேஷ் கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இதுபற்றி அந்த மாணவி தன்னுடைய தந்தை சரவணனிடம் தெரிவித்தார். 
தகராறு
இதைத்தொடர்ந்து சரவணன், அதே பகுதியை சேர்ந்த அவருடைய அக்காள் சித்ரா ஆகியோர் வெங்கடேசின் வீட்டுக்கு சென்று உள்ளனர். அப்போது வீட்டில் வெங்கடேசனின் தாய் லட்சுமி மட்டும் இருந்து உள்ளார். இதனால் அவரிடம் இதுகுறித்து சரவணன், சித்ரா ஆகியோர் தட்டி கேட்டு உள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். 
இதுபற்றி அறிந்ததும் வெங்கடேஷ் தன்னுடைய நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சரவணனின் வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்த சரவணன், சித்ராவிடம் இதுதொடர்பாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் சரவணன் தரப்புக்கும், வெங்கடேஷ் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
கைது
தகராறு முற்றியதில் 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சரவணன், வெங்கடேஷ் காயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆப்பக்கூடலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வெங்கடேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து சரவணன், சித்ரா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்