‘ஹிஜாப்’ விவகாரத்தில் பெண்களை பா.ஜனதா அவமதிக்கிறது நெல்லை தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

ஹிஜாப் விவகாரத்தில் பெண்களை பா ஜனதா அவமதிக்கிறது என்று நெல்லையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி கூறினார்

Update: 2022-02-11 20:41 GMT
நெல்லை:
‘ஹிஜாப்’ விவகாரத்தில் பெண்களை பா.ஜனதா அவமதிக்கிறது என்று நெல்லையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
கனிமொழி எம்.பி. பிரசாரம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நெல்லை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி நேற்று நெல்லை பழையபேட்டை, மேலப்பாளையம் பஜார் திடல் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறது. சரக்கு சேவை வரி பாக்கி, நீட் தேர்வு, புயல்-வறட்சி நிவாரணம் கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்து நின்று தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.
பெண்களை அவமதிக்கும் செயல்
அனைத்து தரப்பினரும் எதிர்த்து வரும் நிலையில் பா.ஜனதா மட்டும் நீட் வேண்டும் என சொல்வது தமிழக மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. கர்நாடகத்தில் முஸ்லிம் பெண்கள் ‘ஹிஜாப்’ அணிய கூட உரிமை இல்லை. இதன்மூலம் பா.ஜனதா கட்சி, பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுகிறது.
தமிழகத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அனைத்து சாதியினர், மதத்தினர் அனைவரும் ஒற்றுமையாக தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கி விடலாம் என்ற கனவுடன் பலர் பணி செய்து வருகின்றனர். எந்த பிரச்சினைகளாக இருந்தாலும் மத சாயம் பூசும் செயலில் சில தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மண் பெரியார், அண்ணா, கருணாநிதி வாழ்ந்த மண். மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யும் இங்கு உங்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது.
அதிகமான தொழில் முதலீடு
தி.மு.க. ஆட்சி மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆட்சி மட்டுமல்லாது, தமிழகத்தின் குரலை தேசிய அளவில் மாற்றியுள்ளது. விவசாயிகளுக்கு பிரச்சினை எழும்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுப்பார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சரின் குரல் என்னவாக இருக்கும் என தேசிய அளவில் திரும்பிப்பார்க்கும் அளவிற்குமாறியுள்ளது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் இந்தியாவிலேயே அதிகமான முதலீடாக தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முதல்-அமைச்சர் விரைவில் நிறைவேற்றி தருவார். பல்வேறு நல்ல திட்டங்களை தந்துள்ள ஆட்சி, உள்ளாட்சியில் தொடர வேண்டும். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க நமது கூட்டணி கட்சியினரை வெற்றி பெற செய்யுங்கள்.
தகுதி இல்லை
உள்ளாட்சி தேர்தலை நடத்த பயப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியை பற்றியும், அமைச்சர்களை பற்றியும், முதல்-அமைச்சரை பற்றியும் பேச எந்த தகுதியும் கிடையாது.
உங்கள் பகுதியின் தேவைகளான தாமிரபரணி ஆற்றில் இருந்து அரியநாயகிபுரம் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், தென்காசி நாற்கரச்சாலை திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தார்.
--------

மேலும் செய்திகள்