ஓடும் பஸ்சில் பணம் அபேஸ் செய்த 2 பெண்கள் கைது
பொன்னமராவதியில் ஓடும் பஸ்சில் பணம் அபேஸ் செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில் மேலைச்சிவபுரி பஸ் நிறுத்தத்தில் இருந்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்த சொர்ணவல்லியும்(வயது 55), அண்ணாநகர் ராம்நாடுவை சேர்ந்த லெட்சுமியும் பஸ்சில் ஏறினர். அவர்கள் இருவரும், பொன்னமராவதி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கோகிலா என்பவருடைய பணப்பையை அபேஸ் செய்தனர். இதனை கவனித்த கோகிலா, அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சொர்ணவல்லி, லெட்சுமி ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.