மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப்- பாதிரியார்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப் பாதிரியார்கள் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
நெல்லை:
மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப்- பாதிரியார்கள் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கேரள பிஷப்-பாதிரியார்கள் கைது
நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து எம்-சாண்ட் மணல் விற்பனை செய்வதற்கு அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு, அந்த பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் மணலை எடுத்து கழுவி அதனை முறைகேடாக கடத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக கேரள மாநிலம் பத்தனம்திட்டை டயோசீசன் பிஷப் சாமுவேல் மார்க் இரேனியல் (வயது 69), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜியோ ஜேம்ஸ், ஜோஸ் சமகாலா, ஜோஸ் கலவியால் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில் பிஷப் சாமுவேல் மார்க் இரேனியல், பாதிரியார் ஜோஸ் சமகாலா ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர்கள் 2 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே பிஷப் சாமுவேல் மார்க் இரேனியல், பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜியோ ஜேம்ஸ், ஜோஸ் சமகாலா, ஜோஸ் கலவியால் ஆகிய 6 பேரும் ஜாமீன் கேட்டு, நெல்லை முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் நேற்று விசாரித்து, பிஷப், பாதிரியார்கள் உள்ளிட்ட 6 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.