அரிமளம் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

அரிமளம் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

Update: 2022-02-11 19:53 GMT
அரிமளம்
அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடகலை சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதி, மடப்பள்ளி, அலுவலக அறை, பக்தர்கள் ஓய்வு அறை என அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று கும்பாபிஷேக தினத்தன்று காலை சாந்தி ஹோமம், மஹா பூர்ணாகுதி அதனைத்தொடர்ந்து கும்பங்கள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வேதவிற்பன்னர்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை தலையில் வைத்து மேளம் தாளம் முழங்க கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். அதனைத்தொடர்ந்து அனைத்து ராஜ கோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனைத்து கருவறையில் உள்ள சுவாமிகளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் நகரத்தார்கள், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்