கார் மோதி கணவன்-மனைவி பலி
கீரனூர் அருகே மொபட் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி உயிரிழந்தனர்.
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த கருப்பர்மலை மருதம்பட்டியை சேர்ந்தவர் செல்லையா(வயது 47). சமையல் மாஸ்டர். இவரது மனைவி ஜெயக்கொடி(38). இவர், கணவருக்கு உதவியாக சமையல் வேலையில் ஈடுபட்டு வந்தார். கணவன்-மனைவி இருவரும் கீரனூர் அருகே உள்ள சின்னபாண்ட்றாரபட்டியில் நடந்த திருமண விழாவில் சமையல் வேலையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து நேற்று மாலை மொபட்டில் மனைவியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
கார் மோதி கணவன்-மனைவி பலி
கீரனூர்-திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே அவர்கள் வந்தபோது திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக மொபட்டின் பின்பகுதியில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து திருச்சி காட்டூரை சேர்ந்த கார் டிரைவர் செல்வராஜ் (63) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.