பட்டப்பகலில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 18 பவுன் நகை-பணம் திருட்டு

துவரங்குறிச்சி அருகே பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-02-11 19:29 GMT
துவரங்குறிச்சி, பிப்.12-
துவரங்குறிச்சி அருகே பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவன ஊழியர்
துவரங்குறிச்சி அடுத்த வலசுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் துவரங்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளநாட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலையில் தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அவர்கள் வீட்டுக்கு விரைந்து வந்தனர்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.  சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விரல் ரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட ஆசாமிகள் இந்த  துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு வீட்டிலும் திருட்டு
 இதேபோல் துவரங்குறிச்சியை அடுத்த வேம்பனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (22). இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த  மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மதியம் வேலுச்சாமியின் அம்மாச்சி  வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி வேலுச்சாமிக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்கம் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன் உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.11 ஆயிரத்து 500 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக வந்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு  செய்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில். ஒரே நாளில் 2 வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்