அரசின் கஜானாவை காலி செய்து வீட்டுக்கு எடுத்து சென்றதுதான் அ.தி.மு.க.வின் சாதனை

அரசின் கஜானாவை காலி செய்து வீட்டுக்கு எடுத்து சென்றதுதான் அ.தி.மு.க.வின் சாதனை என ராஜபாளையத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2022-02-11 19:25 GMT
ராஜபாளையம்,
அரசின் கஜானாவை காலி செய்து வீட்டுக்கு எடுத்து சென்றதுதான் அ.தி.மு.க.வின் சாதனை என ராஜபாளையத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார். 
வாக்கு சேகரிப்பு 
தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. ராஜபாளையத்தில் பிரசாரம் செய்தார். 
சத்திரப்பட்டி சாலையில் உள்ள பி.எஸ்.கே. நகர், வடக்கு மலையடிப்பட்டி, பழைய பஸ் நிலையம், அம்பலபுளி பஜார், சங்கரன் கோவில் முக்கு உள்ளிட்ட 6 இடங்களில் திறந்த வேனில் நின்றவாறு அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற தேர்தலில்  தி.மு.க.வின் கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி பொது மக்கள் வாக்களித்து தி.மு.க. வெற்றி பெற்றுவிட்டதாக சிவகாசியில் விமர்சனம் செய்துள்ளார்.
பொதுமக்களை தி.மு.க. எப்போதும் ஏமாற்றியது கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் வாக்களித்தது தி.மு.க.வின் கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி அல்ல. அந்த வார்த்தைகளில் உள்ள உண்மை மற்றும் சத்தியத்தை நம்பியே வாக்களித்துள்ளார்கள்.
நம்பிக்கை 
ஒரு வாக்குறுதி அளித்தால் அதை தலைவர் கருணாநிதி நிறைவேற்றி விடுவார் என்பது பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். அதே வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் வாக்களித்து தி.மு.க. அமோக வெற்றி பெற செய்துள்ளனர். 
அரசின் கஜானாவை காலி செய்து வீட்டுக்கு எடுத்து சென்றதுதான் அ.தி.மு.க.வின் சாதனை. அரசு பணத்தை எடுத்து சென்றது மட்டுமன்றி வேலை வாங்கி தருகிறேன் என்று உறுதியளித்து பொது மக்களின் பணத்தையும் கொள்ளை அடித்தவர்கள் அ.தி.மு.க.வினர்.
இதுகுறித்து வழக்கு தொடரும்பட்சத்தில் தலைமறைவாகி விடுகின்றனர். மிக முக்கியமான இந்த தேர்தலில் தவறான நபர்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடக்கூடாது. தமிழக அரசின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேராது. அதே நேரத்தில் மக்களின் கோரிக்கைகளும் அரசின் கவனத்திற்கு வராது. எனவே அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
ரெயில்வே மேம்பாலம் 
ராஜபாளையம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், சத்திரப்பட்டி சாலையில் ெரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முழுமை அடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்