மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டு பெண் கொலை; காவலாளி கைது

திருச்சி உறையூரில் மாடியில் இருந்து பெண்ணை கீழே தள்ளி விட்டு கொன்ற வழக்கில் காவாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-11 19:23 GMT
திருச்சி, பிப்.12-
திருச்சி உறையூரில் மாடியில் இருந்து பெண்ணை கீழே தள்ளி விட்டு கொன்ற வழக்கில் காவாளியை போலீசார் கைது செய்தனர்.
காவலாளி
திருச்சி உறையூர் பாண்ட மங்கலம் பாத்திமா நகரில் தனியார் கட்டுமான நிறுவனம் வேலை நடந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் காவலாளியாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு (வயது 30) என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவருடன் கரூர் மாவட்டம் குளித்தலை பொய்யமணி பகுதியை சேர்ந்த அங்கம்மாள் (52) என்பவரும் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளான். இந்தநிலையில் குழந்தைவேலுவுக்கும், அங்கம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
கீழே தள்ளிவிட்டு கொலை
இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குழந்தைவேலு மாடியில் இருந்து அங்கம்மாளை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் குழந்தைவேலு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கட்டு மானபொருட்கள் வைக்கும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் உறையூர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியை சோதனை நடத்தினர். இதில், அங்கம்மாள், உடல் அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
மேலும், அங்கம்மாளுடன் தங்கியிருந்த காவலாளி குழந்தைவேலுவை தேடி வந்தனர். அவர் கடலூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று நேற்று குழந்தைவேலுவை திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அங்கம்மாளை கீழே தள்ளி கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் குழந்தை வேலுவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்