உளுந்து சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
ஓகைப்பேரையூரில் வயல் வரப்பில் உளுந்து சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
கூத்தாநல்லூர்:
ஓகைப்பேரையூரில் வயல் வரப்பில் உளுந்து சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
உளுந்து சாகுபடி
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகளுக்காக கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் முதல் போகமாக குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு அறுவடை செய்தனர். பின்னர் இரண்டாம் போகமாக சம்பா தாளடி சாகுபடி பணிகளை மேற்கொண்டு அறுவடை செய்தனர்.
தற்போது நெல் பயிருக்கு மாற்று பயிராக உளுந்து சாகுபடி மற்றும் வரப்பு உளுந்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதிகளில் குறுவை மற்றும் சம்பா, தாளடி அறுவடை பணிகளுக்கு பிறகு உளுந்து பயறு சாகுபடி பணிகளை அந்தபகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூரில் உள்ள விவசாய நிலங்களில் வரப்புகளில் உளுந்து சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக மகசூல் தரும் வரப்பு உளுந்து
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், சாதாரண வயல்களில் தெளிக்கப்படும் உளுந்து கடந்த சில வருடங்களாக சரிவர வளரவில்லை. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுவதுடன் இழப்பும் ஏற்படுகிறது. மேலும் வயல்களில் தெளிக்கப்படும் உளுந்து முளைப்பதில் தாமதம் ஏற்படுவதுடன், மழை பெய்யும் போது பெரிதும் பாதிக்கப்பட்டு சேதத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் வரப்பு உளுந்து மேடான பகுதிகளில் சாகுபடி செய்யப்படுவதால் அதன் வளர்ச்சி மற்றும் அதிக அளவு மகசூல் தருகிறது. இதனால் தான் சம்பா, தாளடி அறுவடை தொடங்குவதற்கு முன்பு வரப்பு உளுந்து சாகுபடியினை துரிதமாகவும், மும்முரமாகவும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அந்த பகுதி விவசாயிகள் கூறினர்.