ஓசூரில் பதுங்கியிருந்த அசாம் வாலிபர் கைது

திருப்பூரில் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த அசாம் வாலிபரை தனிப்படை போலீசார் ஓசூர் அருகே கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின.

Update: 2022-02-11 18:46 GMT
திருப்பூர்
திருப்பூரில் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த அசாம் வாலிபரை தனிப்படை போலீசார் ஓசூர் அருகே கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின.
சூட்கேசில் பெண் பிணம்
திருப்பூரில் தாராபுரம் சாலையில் பொல்லிகாளிபாளையம் பிரிவு எம்.புதுப்பாளையம் என்னும் இடத்தில் சாக்கடையில் கடந்த 7-ந் தேதி ரத்தகரை படிந்த சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை நல்லூர் போலீசார் மீட்டு திறந்து பார்த்தனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற நபர்கள், உடலை சூட்கேசில் அடைத்து வீசி சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்து சூட்கேசை சாக்கடையில் வீசியது தெரிய வந்தது. கொலையான பெண்ணின் கையில் ‘ஏ குயின்' என்று டாட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. 
ஓசூர் அருகே பதுங்கல்
போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம்.சி. நகரில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த நேகா (26) என தெரிய வந்தது. அவருடன் அருண்தாஸ் என்ற அப்ஜித் (28), ஜெய்லால் சவ்ரா (27) என்ற வாலிபர்கள் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், அவர்கள் 2 பேரும் தலைமறைவானதும் தெரிய வந்தது. அவர்களை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணரவி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் செல்போன் டவர் லோகேஷன் எந்த பகுதியில் உள்ளது என்பதை போலீசார் ஆராய்ந்தனர். அதில் ஜெய்லால் சவ்ராவின் செல்போன் டவர் லோகேஷன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாத்தகோட்டா பகுதியில் இருந்தது தெரியவந்தது.
வாலிபர் கைது 
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சரவண ரவி தலைமையிலான போலீசார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தனர். அங்கு பாத்தகோட்டாவில் பதுங்கி இருந்த ஜெய்லால் சவ்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக திருப்பூருக்கு அழைத்து வந்தனர்.
திருப்பூரில் அவரிடம் நடத்திய விசாரணையில் நேகாவுடன் தங்கியிருந்த அப்ஜித், நேகாவின் கணவர் என்பதும், பிடிபட்ட ஜெய்லால் சவ்ரா அப்ஜித்தின் நண்பர் என்பதும், அவர் அசாம் மாநிலம் சிப்சாகர் கிராண்ட் சோனாரி அருகே உள்ள பாஜோ கானான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
நேகாவுக்கும், அவரது கணவர் அப்ஜித்திற்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததும், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அப்ஜித்தும், ஜெய்லால் சவ்ராவும் சேர்ந்து நேகாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை சூட்கேசில் மறைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து சாக்கடையில் வீசிச் சென்றதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஜெய்லால் சவ்ராவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அப்ஜித்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்பிடிபட்ட பின்னரே மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் குறுகிய காலத்தில் துப்பு துலக்கிய போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்