வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா தொடங்கியது
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருவலம்
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பிரம்மோற்சவ தேர் திருவிழா
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உள்ள வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற பிரம்மோற்சவ தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக 4-ந் தேதி விநாயகர் உற்சவம் நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பகல் மற்றும் இரவில் பல்வேறு வாகன உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான முதல் நாள் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சாமி அமரவைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து மலை சுற்றுப்பாதையில் பக்தியுடன் இழுத்து சென்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா, வள்ளி, தெய்வானை மணாளனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
நிகழ்ச்சியில் கதர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மாதவன், சிவஞானம், செந்தில்குமார், வஜ்ஜிரவேல், ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன், மேலாளர் நித்தியானந்தம் மற்றும் உபயதாரர்கள், விழாக்குழுவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருக்கல்யாணம்
தேர்த்திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாள் தேர் நேற்று மலை சுற்றுப்பாதையில் சுற்றி வந்து, துண்டுகரை பகுதியை வந்தடைந்தது. இன்று (சனிக்கிழமை) இரண்டாம் நாள் தேர் துண்டுகரையில் இருந்து மாலை புறப்பட்டு மலை சுற்றுப்பாதையில் உள்ள சோம்நாதபுரம் என்ற பகுதியை சென்றடைய உள்ளது. மீண்டும் அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை மூன்றாம் நாள் தேர் புறப்பட்டு பெருமாள் குப்பம் பகுதியை சென்றடைகிறது. மீண்டும் அங்கிருந்து 14 ந்தேதி புறப்பட்டு, கோவில் அருகில் உள்ள நிலையை வந்து சேருகிறது.
தேர் இரவு தங்கும் இடங்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், பக்தி சொற்பொழிவுகள், நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 15-ந்் தேதி காலை வேடர்பரி உற்சவமும், வள்ளியம்மை திருக்கல்யாணமும், மாலையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 16-ந் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினரும், உபயதாரர்களும், விழாக்குழுவினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.