நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-11 18:15 GMT
உடுமலை
உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நான்கு வழிச்சாலை
மத்திய அரசின் ‘பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தில் பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம் வரை 50.07 கி.மீ., மடத்துக்குளம் முதல் ஒட்டன்சத்திரம் வரை 45.38 கி.மீ., மற்றும் ஒட்டன்சத்திரம் முதல் கமலாபுரம் வரை 36.51 கி.மீ. என மொத்தம் 131.96 கி.மீ. தூரத்திற்கு இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான பிரதான சாலை மட்டுமின்றி பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கிராமப்புறங்களில் 106.693 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை அமைகிறது.
பணிகள் தீவிரம்
கிராமப்புறங்களில் இந்த நான்கு வழிச்சாலைக்காக நிலம் எடுக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்தல், திட்ட வடிவமைப்பின்படி உயரமாக மண் கொட்டப்பட்டு, ஜல்லிகற்கள் நிரப்பப்பட்டு, தார்ச்்சாலை, சாலையோரங்களில் கான்கிரீட் தடுப்புகள் அமைத்தல், பாலங்கள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
மேலும் முக்கிய நகரபகுதிகளை நான்குவழிச்சாலையுடன் இணைக்கும் வகையில் 47 கி.மீ. தூரத்திற்கு அணுகு சாலையும் அமைக்கப்படுகிறது. இதில் உடுமலை பகுதியில், உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கணபதிபாளையம் பிரிவுக்கு அருகில் இருந்து நான்கு வழிச்சாலை தொடங்குகிறது. இந்த சாலை சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திருப்பூர்சாலை, தாராபுரம் சாலை ஆகிய சாலைகளின் குறுக்கே கடந்து மடத்துக்குளம் அருகே உள்ள பகுதிவரை செல்கிறது. இந்த பகுதிகளில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சின்னவீரம்பட்டி அருகே திருப்பூர் சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மீண்டும் நடைபெறுகிறது
இந்திரா நகரை அடுத்துள்ள பகுதியில் பி.ஏ.பி.உடுமலை கால்வாயின் மேல்பகுதியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பி.ஏ.பி.கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் விடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு சுற்று தண்ணீர் திறப்புக்கும் இடையில் தண்ணீர் நிறுத்தப்படும் நாட்களில் அந்த இடத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி திருமூர்த்தி அணையில் இருந்து முதல் மண்டல பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட 2-வதுசுற்று தண்ணீர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 
3-வது சுற்று தண்ணீர் இன்னும் ஒருவாரம் கழித்து திறக்கப்பட உள்ள நிலையில், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள இந்த இடைப்பட்ட நாட்களில் மீண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் பகுதியில் இறுதிகட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்