வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: பெண் வேட்பாளர்கள் திடீர் தர்ணா-குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியின் போது குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பெண் வேட்பாளர்களின் திடீர் தர்ணாவால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-11 18:07 GMT
குமாரபாளையம்:
நகராட்சி தேர்தல்
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதைமுன்னிட்டு தேர்தலுக்கான பணிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 188 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 73 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 88 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் குமாரபாளையம் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
சின்னம் பொருத்தும் பணி
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான சசிகலா தலைமையில், என்ஜினீயர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை பார்வையிட வேட்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். 
அவர்களிடம் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்களின் வரிசை பட்டியல் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெட்டியில் அடைக்கப்பட்டு, அதற்கு சீல் வைத்து, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
பெண் வேட்பாளர்கள் தர்ணா
இதனிடையே சில வேட்பாளர்கள் கால தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. அதில் சில அரசியல் கட்சிகள், சுயேச்சை பெண் வேட்பாளர்கள் தங்களது முன்னிலையில் பெயர்கள், சின்னங்கள் பொருத்தபப்டவில்லை என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களது முன்னிலையில் சின்னத்தை பொருத்த வேண்டும் என்று கூறி நகராட்சி அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் சசிகலா பெண் வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பெயர்கள், சின்னங்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பெண் வேட்பாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்