நாமக்கல் மாவட்டத்தில் 83 பேருக்கு தொற்று-கொரோனாவுக்கு முதியவர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 83 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார்.

Update: 2022-02-11 18:06 GMT
நாமக்கல்:
குறையும் கொரோனா பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 98 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த பாதிப்பு நேற்று சற்று குறைந்தது. அதாவது நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 83 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 67 ஆயிரத்து 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 576 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 65 ஆயிரத்து 335 பேர் குணமாகி உள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் ஆயிரத்து 622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதியவர் பலி
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேந்தமங்கலத்தை சேர்ந்த 82 வயது முதியவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது பொதுமக்களிடையே சிறிதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும், முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதனை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனா என்ற கொடிய அரக்கனை வெல்ல முடியும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்