தர்மபுரியில் லாரி மோதி கணவன் மனைவி பலி திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

தர்மபுரியில் திருமண விழாவுக்கு சென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Update: 2022-02-11 17:26 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் திருமண விழாவுக்கு சென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-.
செங்கல் சூளை அதிபர்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 56). செங்கல் சூளை அதிபர். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (45). நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி 2 பேரும் தர்மபுரி அருகே நடந்த ஒரு திருமண விழாவுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
தர்மபுரி ராமாக்காள் ஏரிக்கரை-மதிகோன்பாளையம் செல்லும் பிரிவு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது புஷ்பராஜ் லாரியின் பின் சக்கரத்திலும், அவருடைய மனைவி வள்ளியம்மாள் முன் சக்கரத்திலும் சிக்கி சுமார் 20 அடி தூரம் வரை இழுத்து செல்லப்பட்டனர்.
கணவன்-மனைவி பலி
இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லாரியை சாலையில் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து சென்று கணவன்-மனைவி 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
திருமண விழாவுக்கு சென்று திரும்பிய போது கணவன்-மனைவி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்