நீட் தேர்வு விவகாரம் முதல்-அமைச்சர் முகஸ்டாலினை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை அமைச்சர் காந்தி பேச்சு

நீட் தேர்வு விவகாரத்தில் முதல் அமைச்சர் முகஸ்டாலினை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்று கிருஷ்ணகிரியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பேசினார்.;

Update: 2022-02-11 17:25 GMT
கிருஷ்ணகிரி:
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்று கிருஷ்ணகிரியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பேசினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி சார்பில் 33 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா பரவல் சவாலாக இருந்தது, இரண்டு மாதத்தில் பரவலை கட்டுப்படுத்தி, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற மகத்தான திட்டங்களை தந்துள்ளார். கொரோனா நிவாரணமாக, 4,000 ரூபாய் வழங்கினார். கொடுத்த 500 வாக்குறுதிகளில், 250 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார்.
தகுதியில்லை
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்த நீட் தேர்வை கொண்டு வந்தது முந்தைய அ.தி.மு.க., அரசு தான். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. எனவே தி.மு.க. அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கூறி, வாக்கு சேகரிக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சியில் நகராட்சியில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து காவேரிப்பட்டணம், பர்கூர், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை பேரூராட்சிகளில் நடந்த கூட்டங்களில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். இதில் செல்லகுமார் எம்.பி., மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன், மதியழகன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் நவாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்