‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் குழாயில் உடைப்பு
நெல்லை மாவட்டம் அம்பை நகராட்சி 6-வது வார்டு மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக கடந்த பல நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே குடிநீர் வீணாகுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுகிறேன்.
- சம்பத், அம்பை.
மரக்கிளைகள் வெட்டப்படுமா?
ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு தெரு நடுப்பகுதியில் அமைந்துள்ள மரக்கிளைகளானது, அருகில் உள்ள மின்கம்பம் மற்றும் உயர் அழுத்த மின்கம்பிகளில் உரசும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மின்கம்பியில் படாத வகையில் அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- அகமது ரிஸ்வான், ஏர்வாடி.
ஏ.டி.எம். மையம் தேவை
பாளையங்கோட்டை சிவந்திப்பட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பாதி பேர் விவசாயிகள் தான். அவசரத்துக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வேண்டும் என்றால் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே சிவந்திப்பட்டியில் வங்கி ஏ.டி.எம். மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
- முருகேஷ், சிவந்திப்பட்டி.
போக்குவரத்துக்கு இடையூறு
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் இருந்து சுப்புலாபுரம் கடைசி பஸ்நிறுத்தம் வரை வந்து செல்லும் பஸ்களும், இதர ஊர்களுக்கு வந்து செல்லும் வாகனங்களும் நடுத்தெருவை பயன்படுத்தியே வந்து செல்கிறது. ஊரின் தொடக்க எல்லையான ஊருக்கு மேற்கே உள்ள கோவில் தொடங்கி கிழக்கே பஸ்நிலையம் வரை கிட்டத்தட்ட 10 மரங்கள் நடுதெருவின் நடுவே இருப்பதால் இருவழி பாதையாக இயங்க வேண்டிய பாதை ஒரு வழிப்பாதையாக செயல்பட்டு வருகிறது. காலை நேரத்தில் பள்ளிக்கூட பஸ்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அதிகாரிள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்களை நீக்கி சரிசெய்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
- இசைப்பிரியன், சுப்புலாபுரம்.
அரசு பஸ் சீரமைக்கப்படுமா?
நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் இருந்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வரை செல்லும் எண்-3, 3சி, 3டி அரசு பஸ்களில் மேற்கூரை சேதமடைந்து உள்ளது. மேலும் அதில் உள்ள அனைத்து இருக்கைகளும் உடைந்து காணப்படுகிறது. இந்த பஸ்சில் வரும் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கிறார்கள். எனவே அந்த பஸ்களை சீரமைக்க அல்லது புதிய பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- யோவான், புலவனூர்.
பயன்பாடற்ற கிணறு
பாளையங்கோட்டை சாந்திநகர் மற்றும் கக்கன்நகர் பஸ்நிறுத்தங்கள் இடையே பைபாஸ் பாலம் உள்ளது. அதன் அருகில் சர்வீஸ் ரோட்டின் ஓரம் பயன்பாடு இல்லாத நிலையில் கிணறு ஒன்று தடுப்புச்சுவர் ஏதுமின்றி அமைந்துள்ளது. எனவே ஏதேனும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷேக், தாழையூத்து.
அரசு கல்லூரி வேண்டும்
முக்கூடலில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கல்லூரி படிப்பிற்காக நெல்லைக்கு சென்று வருகிறார்கள். எனவே முக்கூடலில் அரசு கல்லூரி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ரவிசாமி, முக்கூடல்.
பழுதடைந்த அடிபம்பு
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு எடுப்போர் கிராமம் காமராஜர் தெருவில் உள்ள அடிபம்பு பழுதாகி சுமார் 3 வருடங்களாக அப்படியே கிடக்கிறது. மேலும் அதனை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. எனவே அடிபம்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- ராமச்சந்திரன், எடுப்போர்.
மேற்கூரை இல்லாத பஸ்நிலையம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பஸ்நிலையத்தின் பயணிகள் அமரும் இடத்தில் மேற்கூரையில் இருந்து காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த காரணத்தால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இதுவரை தற்காலிகமாக ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலில் நிற்கும் நிலை உள்ளது. திடீரென மழை பெய்தால் கூட ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. எனவே பஸ்நிலையத்துக்கு உடனடியாக மேற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டுகிறேன்.
- சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.