திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தி பரவசத்தில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் பக்தி பரவசத்தில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-02-11 17:05 GMT
முருகபவனம்:
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் பக்தி பரவசத்தில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூக்குழி இறங்கிய பக்தர்கள்
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து காலை 6 மணி அளவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கினர்.
அவ்வாறு பூக்குழி இறங்கிய பக்தர்களில் சிலர், கைகளில் குழந்தையை தூக்கிக் கொண்டும், தலையில் கரகம் சுமந்தும், அக்னி சட்டி ஏந்திய படியும் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது பூக்குழியை சுற்றி இருந்தவர்கள் பக்தி பரவசத்தில் "கோட்டை மாரியம்மன் தாயே, பராசக்தி தாயே' என்று கோஷம் எழுப்பினர்.
தேரோட்டம்
பின்னர் மாலை 5 மணி அளவில் மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டம் நகரின் ரதவீதிகளில் வலம் வந்து, பின்னர் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்